முன்னோர்கள் நமது தமிழை மூன்றாய் வகுத்து பழக்கியமைக்கு காரணம் உண்டு. அதற்கென நெறி வகுத்து அந்த நெறி பிறழாமல் அதனை கடைப்பிடித்தும் வந்தனர். ஆனால் இன்றய காலகட்டத்தில் அதன் ஒழுங்கு நிலை மாறி அதன் தன்மையே உணரப்படாமல் இருக்கின்றது. ஆனால் இந்த பகுப்பு முறை அந்தக் காலத்திற்கு மட்டுமின்றி காலங்கடந்து நின்று, இந்தக் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் கூட துணை நிற்பனவாய் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு அதன் அறிவியல் தன்மை நுட்பமாய் உள்ளது. எனவே அதை மீளுருவாக்கம் செய்து நவீன தொழில் நுட்பத்திலும் அதை புகுத்துவது என்பது பற்றியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது...
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழுக்கு என்ன நன்மை நமக்கு என்ன நன்மை? என்று பார்த்தோமானால். இன்றைய தகவல் தொழில்நுட்ப அறிவியலில் உள்ள சில இடைவெளிகளை தமிழால் நிரப்ப முடியும் என்ற கருத்தைத் தாங்கி ஆய்வை கொண்டு செல்கிறோம். அது வெற்றியடையும் போது தமிழும் ஒரு தொழில் நுட்ப மொழியாகவும் வணிக மொழியாகவும் மாறிவிடும். இதனால் நமக்கு ஏற்படும் இலாபங்களை பகுதி பகுதியாக காண்போம். அதற்கு முன் சில அடிப்படைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதன், தான் உணர்ந்ததை, அடுத்த மனிதனுக்கு உணர்த்த செய்யும் செயல் முறையே, மொழியாகும். மொழியால்தான் அவனது சிந்திக்கும் திறன் மேம்படுகிறது. செயல்திறன்கள் கூட வேகமடைகிறது. இதன் பொருட்டே தன்னை உயர்திணையாகவும் மற்ற உயிரினங்களை, அஃது இல்லாத திணையாகவும் (அஃறிணையாகவும்) பிரித்துக்கொண்டுள்ளான்.
மற்ற உயிரினங்கள் அவற்றிக்கென்று உள்ள உயிரோசையை மட்டும் ஒரே விதத்தில் எழுப்புகிறது. ஆனால் மனிதனுக்கும் கிளிகளுக்கும் தொண்டையில் குரல்வளை என்ற அமைப்பு உள்ளதால் மாறுபட்ட ஒலியோசைகளை எழுப்ப முடிகிறது. எனவேதான் மனிதனுக்கு மொழி என்ற தகவல் கட்டமைப்பு எளிதாகிறது.
உயர்திணையான மனிதனுக்கு ஐந்து புலப்பொறி மூலம் ஐந்து புலனறிவுகள் கிடைக்கின்றன அதுமட்டும் அல்லாமல் ஆறாவதாக மணம் என்ற சிந்தனை அறிவும் அவனுக்கு அமைந்துள்ளது. அதன்படி அவனது ஐம்பொறிகள் மூலம் அவன் உணரும் ஐம்புலன்கள் பற்றி கொஞ்சம் விரிவாக ஆய்வோம்.
ஐம்பொறிகள் | ஐம்புலன்கள் | தகவல் தன்மை |
---|---|---|
1. மெய் | உற்று | பெறுவது, தருவது. |
2. கண் | காட்சி | பெறுவது. |
3. வாய் | சுவை | பெறுவது, தருவது. |
4. மூக்கு | நாற்றம் | பெறுவது. |
5. காது | கேள்வி | பெறுவது. |
மேலுள்ள அட்டவணையின்படி ஐம்பொறிகள் மூலம் தான் பெற்ற அறிவை தகவலாக தனக்குள் பதிவு செய்துக்கொள்கிறான். அதை உடனடியாகவோ அல்லது தேவைப்படும் போதோ; தனக்காகவோ அல்லது பிறருக்கு தகவலாகத் தெரியப்படுத்தவோ; முற்படுகிறான்.
அவ்வாறு தான் பெற்ற தகவல்களில் 1. உற்றுணர்தல் 2. சுவையுணர்தல் 3. நாற்றமுணர்தல் ஆகிய தகவலை மட்டும் நேரடியாகவோ அல்லது கருவிகள் மூலமாகவோ அவனால் பிறருக்கு தெரிய படுத்த முடியாது. மற்ற தகவலான காட்சியையும் கேள்வியையும் துல்லியமாக அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்த முடிந்துவிடுகிறது. அதாவது காட்சியில் உணர்ந்ததை மெய்யைப் பயன்படுத்தியும் கேள்வியில் உணர்ந்ததை வாயை பயன்படுத்தியும் தகவலை தெரிவித்து விட முடிகிறது.
இவ்விரண்டிற்கும் இன்றைய காலக்கட்டத்தில் கருவிகள் கூட மிகத் துல்லியமான துணையாக இருக்கிறது. அவற்றை பிறருக்கு கருவியின் வாயிலாகவே பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது.
இந்நிலையில் தகவலைத் தரும் ஒரு நபர் அல்லது அதை பெரும் ஒரு நபர் இவர்களில் எவருக்கேனும் அவர்களுடைய புலணுறுப்பில் குறையிருப்பினும் தகவல் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே பின்வருமாறு தமிழை மூன்றாக பகுத்தனர். அவைதாம் 1. இயல் 2. இசை 3. நாட்டியம்.
இம்மூன்றனுள்ளும் இரண்டிரண்டு பகுப்புகள் உள்ளன. அவைதாம் இயலினுள் 1. சித்திரம் 2. எழுத்து என்பதும். இசையினுள் 1. குரலோசை 2. இசைக்கருவி என்பதும். நாட்டியத்தினுள் 1. முத்திரை 2. பாவம் என்பதுமாகும்.
இவ்வாறாக முத்தமிழின் பயன்பாடு எடுத்தாளப்படுகிறது. மேலும் இன்றைக்கு நவீன கருவிகள் நம்மோடு தகவல் கடத்துதலில் இணைப்பில் இருக்கிறது. அவற்றை இயக்குபவர்களாக நாம் இருக்கின்றோம். சில வேளைகளில் அவைகள் நம்மை இயக்குகின்றது. அவற்றை கையாளுவதில் நமக்குள்ள சிரமங்களைப் பற்றி நாம் காண்போம். ஏனென்றால் இந்த முத்தமிழ் பகுப்பு முறை அவற்றிற்கும் சில வழிகாட்டுதல்களை தருகிறது. இந்த வகையில் ஆய்வை நாம் கொண்டு செல்லும் போது கணினி தொழில் நுட்பத்தில் தமிழின் இன்றியமையாமை பற்றி உங்களுக்கு புரியவரும்.