ஊட்டச் சத்து சமநிலையின்மைக்கு பல்வேறு விதமான மூலிகைகளில் இருந்து பௌதீக இரசாயனத்தை பெற்று நம்மை சரி செய்து கொள்ள தமிழில் பல மூலிகை மருத்துவ (சித்த மருத்துவ) நூல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டு தெளிவடைந்து கொள்ளலாம்.
அதேபோல் சில மூலிகைகளுக்கு தமிழில் இடப்பட்டுள்ள பெயரே அது எந்த நோயை குணப்படுத்தும் என்பதை உணர்த்திவிடும்.
சான்றாக
1. முடக்கற்றான் - முடக்கு + அற்றான் = முடக்கற்றான், பாரிச வாயுவின் தாக்குதலால் கை கால்கள் முடமாகாமல் ஒருவனை காப்பாற்றி, அவனை முடக்கு அற்றவனாக மாற்றுவதால் முடக்கற்றான் என பெயர் பெற்றது.
2. சீரகம் - சீர் + அகம் = சீரகம், அகத்தைச் சீராக்குவதால் சீரகம் என பெயர் பெற்றது.
ஆற்றல் சமநிலையின்மை என்பது அண்டத்தில் உள்ள வேதி ரசாயனமாய் இருக்கின்ற ஐம்பூதங்களோடும் அதன் இயக்க ஆற்றலோடும், நம்முடைய பிண்டத்தில் உள்ள பௌதி ரசாயனங்களும் அதன் இயக்க விளைவால் எழுகின்ற ஆற்றலான, ஜீவகாந்தம், ஜீவமின்சாரம், ஒளிஒலி, தட்பவெட்பம் போன்றவையும் சமநிலைப் படுவது ஆகும்.
சரி இதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்தால், நோய் வருவதற்கு இரண்டு காரணங்கள் என்று பார்த்தோம், அப்படி வந்த நோய் அடையாள படுத்தப் படுவது மூன்று வகையாக, அவை என்ன என்று தெரிந்து கொண்டால் உங்களுக்கு சற்று எளிதாக புரியும். அவையாவன:
இன்மூன்று நோய்களும் உடலை அண்டாமல் இருக்க, உடலுக்கு நல்ல இயக்கப் பயிற்சிகள் தேவை, எனவேதான் யோகநிலைகளையும் நாடி சுத்தியையும் நல்லியக்கப் பயிற்சிகளாக உடலுக்கென வகுத்துள்ளனர். இவற்றை முறையாக செய்து வருவதன் மூலம் ஆற்றல் சமநிலை ஏற்படுகிறது.
இவற்றில் யோகநிலை என்பது களப்பயிற்சியாகவும் அதற்கு உரிய கால நேரங் கொண்டதாகவும். உள்ளது. ஆனால் நாடி சுத்தியோ வெறும் உடலியக்க பயிற்சியாக மட்டுமின்றி. மனக்கட்டுப்பாட்டு பயிற்சியாகவும், ஆயுள் நீட்டிப்பு பயிற்சியாகவும் உள்ளது.
இந்த இடத்தில்தான் தமிழ் மொழி ஒரு மனிதனுக்கு நாடிப்பயிற்சியாக செயல்பட்டு அவனுக்கு ஆற்றல் சேமிப்பு கலனாகவும். ஆற்றல் பெருக்கு மையமாகவும், குணப்படுத்தும் மருந்தாகவும் செயல்படுகிறது.
எப்படியென்றால்? ஒரு மனிதன் தான் செய்யும் செயல்களில், நடப்பது, ஓடுவது, நீந்துவது என்பன போன்ற செயலுக்கு செலவிடும் ஆற்றலை விட, பேசுவதற்கு செலவிடும் ஆற்றலே அதிகமானது. அதை முதலில் மிச்சப்படுத்தி சேமித்தாலே அவனுடைய ஆற்றல் நிலைபெறும்.
அப்படி பேசுவதில் அவனுடைய மூச்சானது அதிகம் செலவடைந்தால், அவனுடைய ஆயுளானது குறையும். சான்றாக: நாயின் மூச்சு வேகமானது அதிகமானதும் கூட, ஆனால் அதன் ஆயுள் குறைவானதே. வெறும் 15 ஆண்டுகள்தான். ஆனால் ஆமையின் மூச்சு மிகவுந் தாமதமானது, எண்ணிக்கையும் குறைவானது எனவே அதன் ஆயுள் உலகிலேயே மிக அதிகமானது. 450 ஆண்டுகள் வரை வாழும் தன்மைக் கொண்டது.
எனவே நாயின் மூச்சிலிருந்து ஆமையின் மூச்சுக்கு அவனது வேகத்தை மாற்ற வேண்டும். ஆக பேச்சின் போதே மூச்சை நிதானமாக உள்ளிழுக்கவும், அடக்கி வைக்கவும், அவ்வாறு அடக்கிவைத்த மூச்சை நிதானமாக வெளியேற்றவும் அமைக்கப் பட்டிருப்பதாய் அவனது மொழியானது இருக்க வேண்டும்.
இந்த உலகில் மொழி என்ற தகவல் பரிமாற்ற அறிவை, நெறிவகுத்து நுட்பமாய் பயன்படுத்துவது மனித இனம் மட்டுமே. அதற்கு காரணம் அவனுடைய ஆறாவது அறிவான மனம் என்ற பொறியில்லா புலனறிவுதான். மனதின் சிந்தனைத் திறனே ஒலிவேறுபாடுகளைத் தொகுத்து மொழியாக வரிசைப் படுத்துகிறது.
அதன் பொருட்டு மனிதன் தனது ஐம்பொறியின் வாயிலாக தான் உணர்ந்த ஐம்புலனறிவை தனக்காக பதிந்து வைக்கவும், சகமனிதனுக்கு உணர்த்தவும் மொழியை பயன் படுத்துகிறான்.
உலகில் காணப்படும் பல்வேறு மொழிகளில் மூச்சு பயிற்சி போன்றதொரு தன்மையை தமிழ் மொழி பெற்றுள்ளது. தமிழில் அமைக்கப் பட்டுள்ள சொற்களில் நெறி (இலக்கணம்) உண்டு. புணர்ச்சி விதியின்படி அவை அமைவதால், தகவலை மொழிவதில் அவனுக்கு சோர்வோ தடையோ ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி எந்த எழுத்திற்கு பின்னால் எந்த எழுத்து இருக்க வேண்டும், என வரையறுத்து மூச்சு சுழற்சி வாய்க்குள்ளேயே நடப்பதற்கு பார்த்து பார்த்து சொற்களை கட்டமைத்து இருக்கிறார்கள்.
முன்னோர்களுடைய இந்த தமிழ் மொழியானது தனது சொற்களை நான்கு தொகுப்பாக வைத்திருக்கிறது. அவை
சான்றாக: இன்று நாம் பேசும் தமிழ்
அவர பாத்ததும் எனக்கு பட் டுன்னு சந்தோடம் (சந்தோஷம்) வந்துச்சு
நெறி பிறழா பழந்தமிழ்
அவரைப் பார்த்ததும் எனக்கு பட் டென்று மகிழ்ச்சி வந்தது.
இவ்வகையான சொற்களில் இயற்சொல்லை மட்டும் தமிழர்கள் பயன்படுத்தும் போது அவர்களது வாழ்க்கை நலம் பொருந்தியதாக சிறப்படைகிறது.
மேலும் தமிழின் எழுத்துக்களை பாருங்கள் அவை நமது உடல் இயக்கத்தை வெளிப்படுத்துவது மாதிரியான பெயர்களையே தலைப்பாக கொண்டிருக்கும். அவை.
1. உயிரெழுத்து: உயிர் என்றால் இயக்கம். உடலின் இயக்கம் காற்றால் ஏற்படுகிறது எனவேதான் “ஆவி பிரிந்தார்” என்றும் “மூச்சு நின்றது” என்றும் இறந்தவரைச் சொல்லுவார்கள். எனவே அத்தகைய காற்றைக் கொண்டு மட்டுமே எழுப்பப்படும் எழுத்துக்கள் ஆதலின் உயிரிலிருந்து பிறக்கும் எழுத்துக்கள் எனப்படுகிறது. அவை.
அ ஆ இ ஈ எ ஏ ஐ உ ஊ ஒ ஓ ஔ
2. மெய்யெழுத்து: மெய் என்றால் உடல் என்று பொருள், ஆனால் இங்கே இந்த எழுத்து பிறப்பதற்கு தேவையான வினைகள உறுப்புக்களான பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்ற உருப்புகளையே மெய் என்கிறோம். அவற்றின் வடிவக்குறிகளைக் கொண்டு அமைக்கப் பட்ட எழுத்துக்களே மெய் எழுத்துக்கள் ஆகும். அவை.
க் ச் ட் த் ப் ற்
ங் ஞ் ண் ந் ம் ன்
ய் ர் ல் வ் ழ் ள்
இவ்வாறு உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன. அதாவது இவ்விரண்டு எழுத்துக்களைக் கூட்டி எழுதும் சங்கிலி எழுத்துமுறையே சார்பெழுத்து எனப்படும். அவை மொத்தம் 216 ஆகும்.
இதன்படி மூவகை எழுத்து வடிவங்களைக் கொண்டு சொற்கள் எழுதப்பட்டாலும். அவற்றை ஒலிக்கும் போது, ஒரு உயிர் எழுத்தை அடுத்து ஒரு மெய் எழுத்தும் அதேபோல் ஒரு மெய் எழுத்தை அடுத்து ஒரு உயிர் எழுத்தும் எனவும் சில இடங்களில், ஒரு மெய் எழுத்திற்கு அருகில் ஒரு மெய் எழுத்து எனவும், ஆனால் ஒரு உயிர் எழுத்திற்கு அருகில் ஒரு உயிர் எழுத்து இடம்பெறாமலும் இருக்கும்படி சொற்கள் மொழியப்படும். இதனால் மூச்சு ஓட்டம் சீராக நடைபெறும். இது வாசியோக கலையை போன்ற தொரு முறைதான்.
இதுபற்றி நாம் தெரிந்து கொள்ள சித்தர்கள் வகுத்த மூச்சுக்கணக்கு பற்றியும் வாசியோகம் பற்றியும். ஜீவ அமிழ்தம் பற்றியும் தெரிந்து கொள்வது சிறப்பாகும்.
ஒரு யுகம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது:
21600 மூச்சுக்காற்று..!
உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். சித்தர்களின் கணக்குப்படி மனிதனின் மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல் 10800/நாள்), நிச்சுவாசம் (வெளியேறுதல் 10800/நாள்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகள்.
சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம் (அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.
1 நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும்போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும், 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
அருளொலி வீசுகின்ற ஆன்மா (அ+உ+ம்=) ஔம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.
இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 2,16,000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக்கணக்கு கண்டுள்ளனர்.
அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை) ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.
ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது. இந்த சிற்சபையே உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64 வகையான கலைகளாகும்.
பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.
5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.
இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரக்கலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.
வான்வெளி ஆராய்ச்சியின் அடிப்படைக் கல்வி என்னவென்றால் மூச்சே நேரம். அனைத்து சித்தர்களும், மகான்களும் சொல்வதும் இதுவே.
நாம் விடும் மூச்சானது உள்ளே வெளியே என்று இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. காலச்சக்கரம் என்பது நாம் விடும் மூச்சைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும், வான்வெளியைக் கொண்டும் கணக்கிடப்படுவது.
மூச்சைக் கடுப்படுத்த, மனமும் உடலும் கட்டுப்பாடு அடைகிறது.
அது பற்றி சித்தர்களின் வாசியோக மருத்துவத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது.
ஏறுதல் | பூரகம் | ஈரெட்டு | வாமத்தால் |
ஆறுதல் | கும்பம் | அறுபத்து | நாலதில் |
ஊறுதல் | முப்பத் | திரண்டதி | ரேசகம் |
மாறுதல் | ஒன்றின்கண் | வஞ்சக | மாமே. |
திசைகளோடு கூடிய உலகமானது அடங்கியிருக்கும் பிரணவத்தினிடத்திலிருந்து சூரிய கலையைப் பதினாறு மாத்திரை யளவாக மேலேற்றுதல் பூரகம்.
வாமபாகத்திலுள்ள சந்திர கலையை முப்பத்திரண்டு மாத்திரையாக கல்ல வைத்தல் ரேசகம்.
பிரணவத்தின் நடுவீட்டில் சூரிய சந்திர கலைகளை அறுபத்திநாலு மாத்திரையளவு அசைவற்று நிறுத்தல் கும்பகம் ஆகும்.
பூரகம்: பூரிப்பை அதாவது கலை (ஒளி) விரிவை செய்வது.
ரேசகம்: சூரிய கலையோடு, சந்திர கலையை ரேசிக்க அல்லது கலக்கும்படி செய்தல்.
கும்பகம்: பிரணவமாகிய கும்பத்தின் அகம்மென்னும் நடு வீட்டில் இரண்டு கலைகளையும் (சூரிய ஒளி, சந்திர ஒளி) சேர்த்தல்.
இதே வாசியோகக் கலை தமிழில் பேசும் போது இவ்வாறு நடைபெறும்
மூன்று தலைப்பிட்ட மெய் எழுத்துக்களில்
க ச ட த ப ற - வல்லெழுத்து ஆறும்
மூச்சை வெளியேற்றும் எழுத்துக்கள் (இரேச்சகம்)
ங ஞ ண ந ம ன - மெல்லெழுத்து ஆறும்
மூச்சை மிதமாக உள்ளிழுக்கும் எழுத்துக்கள் (பூரகம்)
ய ர ல வ ழ ள - இடையெழுத்து ஆறும்
மூச்சை உள்ளேயே அடக்கிவைத்து சொல்லக் கூடிய எழுத்துக்கள். (கும்பகம்).
தமிழ் கூற அமிழ்து ஊரும்
தமிழில் உள்ள ழகரம் என்னும் மெய் எழுத்து ஒலிக்கும் போதெல்லாம் நமது நாவின் நுனியானது அண்ணத்தை வருடும். அதனால் அமிழ்தக் கலையை இயக்கும் செயல் மறைமுகமாக நடை பெறுகிறது.
உதாரணமாக: குழந்தைகள் தமக்கு பல் முளைத்த பிறகு, தாய்ப் பால் குடிப்பதை நிறுத்தி விடும். அதற்கு பிறகு, ஐம்பூத ஆற்றலைக் கொண்டு வாழ முயற்சிக்கும். அதன் ஒரு படியாக கைப்பெருவிரலை வாய்க்குள் வைத்து மேல் அண்ணத்தை வருடத் துவங்கும். இதனால் அமிழ்தக் கலை இயக்குமுற்று உடல் தனக்கு தேவையான ஆற்றலை ஐம்பூதச் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளும். மேலும் அவ்வாறு ஊரும் அமிழ்தமானது உடலை தெய்வீக இணைப்பிலேயே வைத்திருக்கும். இதனால் உடல் அடையப்போகும் நன்மை என்ன?
உடல் என்ற ஒன்று தோன்றிவிட்டால், அதற்கு 1. பசிதாகம் 2. நோய் 3. காமம் 4. மூப்பு 5. மரணம் என்ற இவ்வைந்தும் வந்தே தீரும். இந்த அநுபவங்களை எல்லா உடலும் அடையும். இதனால் உடலுக்கு வினைப்பதிவுகள் உண்டாகி மனம் பிறவியில் சுழலுகின்றது.
பிறவியை நிறுத்த வினைப்பதிவை நிறுத்த வேண்டும்.
வினைப்பதிவை நிறுத்த புலன் அநுபவங்களை நிறுத்த வேண்டும்.
அதற்கு ஒரேவழி அமிழ்தக் கலையை பழக்குவது அதாவது ழகரம் உள்ள இயற்சொல் தமிழை மட்டுமே பேசுவது ஆகும்.
ஆக ழ என்ற எழுத்து ஆற்றலைக் கூட்டி நோயை தீர்க்கும்.